fbpx
You are here
Home > BLOGS >

மலைக்க வைக்கும் சென்னை துறைமுக வரலாறு

Chennai Harbor

எப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத, இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 6 வது இடத்தில் உள்ளது. தமிழகத்தின் தலைநகரம்  சென்னையின் மக்கள் தொகை 86.5 லட்சம். தமிழகத்தின் தலைநகர் சென்னையின் வயது 381 ஆக இருந்தாலும் அது உருவான வரலாறு மிகவும் சுவாரசியமானது.

16 – ம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர்கள் முதன்முதலாக வணிக நோக்கத்திற்காக சென்னை வந்தனர்.பின்னர் அவர்களை தொடர்ந்து ஆங்கிலேயர்கள் இங்கு வந்து வியாபாரம் செய்ய தொடங்கினர். 1639 காலகட்டத்தில் ‘பிரான்சிஸ் டே’ என்பவர் சோழமண்டல கடற்கரையில் (southeastern coast region ) ஒரு இடத்தை வாங்குகிறார்.அங்கு பிரிட்டிஸ்காரர்கள் ஜார்ஜ் கோட்டையை காட்டுகின்றனர். பின்னர் அருகில் இருந்த கிராமங்கள் எல்லாம் படிப்படியாக மதராஸ் பட்டினத்துடன் இணைந்தன. அப்பகுதி மெட்ராஸ் பிரசிடென்ஸி என்றும்  அழைக்கபட்டுள்ளது. வரலாற்றில் சென்னையின் பெயர்களில் பல முரண்பாடுகள் இருந்தாலும் ஆங்கிலேயர்கள் காலத்தில் நம் சென்னைக்கு பெயர் “மதராஸ் பட்டினம்”.

தற்போது மொழிவாரி அடிப்படையில் தனித்தனி மாநிலங்களாக இருந்தாலும் அன்றைய மதராஸ்பட்டினத்தில் இன்றைய தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருந்தது.  இந்தியாவை தனது காலனி ஆதிக்கத்தில் கொண்டு வருவதற்கு ஆங்கிலேயர்களுக்கு மிகவும் பலமாக இருந்தது மதராஸ் பட்டினம். இங்கிருந்துதான் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் ஆங்கிலேயர்கள் தங்களது காலனி ஆதிக்தத்தை விரிவுபடுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Chennai Harbor during British Period

1522இல் போர்ச்சுகீசியர்கள் சோழ மண்டல கடற்கரையில் சிறிய துறைமுகம் ஒன்றை நிறுவியிருக்கிறார்கள். போர்ச்சுகீசியர்களைத் தொடர்ந்து 1613இல் டச்சு வர்த்தகர்கள் பழவேற்காடு பகுதிக்கு வந்தனர். அவர்கள் வந்து சுமார் 25 ஆண்டுகள் கழித்தே, அதாவது 1639ஆம் ஆண்டுதான் கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் சென்னை மண்ணில் கால் பதித்தார்கள். அவர்கள் கடற்கரை ஓரத்தில் புனித ஜார்ஜ் கோட்டையை கட்டி வியாபாரத்தை ரிப்பன் வெட்டித் திறந்ததும், அவர்களுக்கான சரக்குகள் இங்கிலாந்தில் இருந்து பெரிய பெரிய கப்பல்களில் மெட்ராஸ் வரத் தொடங்கின. ஆனால் அப்போது இங்கு துறைமுகம் எதுவும் கிடையாது.

எனவே கப்பல்கள்  நடுக்கடலிலேயே நிற்க வேண்டிய கட்டாயம். பெரிய படகுகள் (MASULAH BOATS) கடலுக்குள் சென்று கப்பலில் உள்ள சரக்கை கரை சேர்ப்பார்கள். சில சமயங்களில் பெரிய அலைகலின் பாதிப்பால் இந்த படகுகள் கவிழும்போது, சரக்குகளை கடலில் இழக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால் மதராஸ் வர்த்தக சபையினர் துறைமுகம் வேண்டும் என்ற கோரிக்கையை வலுவாக ஆங்கிலேயர்களிடம் வைத்தனர். இதனையடுத்து பெரிய கப்பல்கள் சற்று உள்ளே வந்து நிற்பதற்கு வசதியாக 1861ஆம் ஆண்டு ஒரு நீண்ட சுவர், கடற்கரையில் இருந்து கடலை நோக்கி  குறுக்காக கட்டப்பட்டது. கடலுக்கும் இந்த சுவருக்கும் இடையில் கிழக்குப் பகுதியில், 515அடி திறப்புடன் ஒரு செயற்கைத் துறைமுகம் உருவாக்கினர் ஆங்கிலேயர்கள்.

கராச்சி துறைமுகத்தை கட்டிய பார்க்கஸ் என்பவர்தான் இந்த யோசனையை முன்வைத்தார். இதற்காக பல்லாவரம் மலையில் இருந்து கற்கள் எடுத்து  வரப்பட்டு சுவர் எழுப்பப்பட்டு துறைமுகம் உருவாக்கப்பட்டது. இத்துறைமுகத்தில் 1881ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பெரிய கப்பல்கள் உள்ளே வரத் தொடங்கின.  ஒரு வழியாக இந்த பணி 1896இல் முழுமை அடைந்தது. இந்த துறைமுகத்தை மேம்படுத்தும் பணியில் சர் பிரான்சிஸ் ஸ்பிரிங் என்பவர் 1904ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இவர்தான் இன்றைய துறைமுகத்தின் பிரம்மாண்ட வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர். அடுத்த ஆண்டு உருவாக்கப்பட்ட ‘மெட்ராஸ் போர்ட் டிரஸ்டு’ -க்கு தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பிரான்சிஸ், பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். இன்று இந்தியாவின் இரண்டாவது பெரிய துறைமுகமாக மும்பைக்கு அடுத்து சென்னை துறைமுகம் தான் விளங்குகிறது.

மெட்ராசின் பழமையைப் பறைசாற்றியபடி நூற்றாண்டுகள் கடந்து நின்றுகொண்டிருக்கும் ஒவ்வொரு கட்டடத்திற்கு பின்னும் ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறது. இன்றைய ஒவ்வொரு இடத்திற்கு அடியிலும் ஒரு வரலாறு நிலத்தடி நீராய் ஈரம் மாறாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. கால ஓட்டத்தில் எத்தனையோ மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டு இன்றும் இளமை மாறாமல் அதே துடிப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சென்னை நகரத்திடமும், துறைமுகத்திடமும் இருந்து நாம் கற்றுக் கொள்ள இன்னும் நிறைய இருக்கவே செய்கின்றன.

– கோம்பை ஜெ. நிஜாமுதீன்

Leave a Reply

Top